கரகமாய் மட்டுமல்ல...
வானவில்லின் வர்ணம்
ஒட்டுகிறதா எனத்
தொட்டுப் பார்.
ஒழுகும் மழையால்
உன் மனசை நிரப்பு.
தென்றல் வீசியும்
பன்னீராய் வேர்க்கும்
பூக்களுக்குக்
கைக்குட்டை கொடு.
வானமரம் உலுக்கி
நட்சத்திரக்காய் பொறுக்கு.
நிலவொளியை விரலிடுக்கில்
வழியவிட்டு மரங்களின்
பரதம் பார்.
என்றெல்லாம் எழுத
எங்களுக்கும் ஆசைதான்.
ஆனால்
நிஜங்களை நிராகரித்துவிட்டு
நிழல்களோடு
கைகுலுக்க முடியுமா?
அதனால்தான்...
வாழ்க்கையின்
அவலங்களுக்கு எதிராய்ப்
போராடு என்று
புதுக்கவிதை செய்கிறோம்.
கவிதையை
கரகமாய் மட்டுமல்ல...
வாளாகவும்
சுழற்றி வருகிறோம்.
என் தோழனுக்கு..
எழுந்திரு இளைஞனே!
எழுந்திரு!
சாதிக்க வேண்டுமெனில்
விழுந்து அடிபடு,
வேகமாய் செயல்படு
வேரில் வீழ்கிற வேர்வைத்
துளிகள் தான் பூவாய்ச்
சிரிக்கும் புரிந்துகொள்
இதனை சும்மா இருந்தால்
சுகம் கிடைக்காது
அடைய வேண்டுமெனில்
அவஸ்தை அவசியம்
ஊருக்கும் சேர்த்தே
உன்னாசை இருக்கட்டும்
உனதாசை நிறைவேற
ஓயாமல் போராடு.
திசையைத் தீர்மானம்
செய் தடுமாற்றம்
ஆனாலும்
தடமாற்றம் ஆகாதே.
நிமிடத்தை நீட்டித்து
நித்தமும் செயல்படு
ஒவ்வொரு செயலும்
உனக்கொரு அனுபவம்.
எழுந்திரு இளைஞனே!
எழுந்திரு!
சாதிக்க வேண்டுமெனில்
விழுந்து அடிபடு,
வேகமாய் செயல்படு.
சரிகப் புடவை கட்டி
எல்லையிலே காளிகோயில்
ஏழு நாள் திருவிழாவாம்.
திருவிழா சிறப்பாக
தேரோட்டம் சாயங்காலம்.
சாயங்கால வேளையிலே
அம்மனை அலங்கரிச்சு
சரிகப்புடவை கட்டி
சரம்சரமாய் நகை
போட்டு ஊர்கோலம்
போகுமின்னு ஊரே
மகிழ்ந்திடுது.
தேரோட்டம் பார்ப்பதற்கு
எதைக்கட்டிப் போவதுன்னு
மாடிவீடுகளில்
மாலைவரை யோசனைகள்.
எதைத்தான் கட்டுறது
எல்லாமே கிழிஞ்சிருக்கு.
என் போன்றோர் நிலை
இதுதான் என்னத்தச்
சொல்லி அழ.
ஆளான நாள் முதலா
ஆத்தாளின் பழம் புடவ
தனித்துணியே
எடுத்ததில்ல தங்கச்சிக்கு
என் கிழிசல்.
சரிகப்புடவ கட்டி
சாயங்காலம் ஊர்வலமாம்
அம்மன் பார்க்கப்
போக வேணும்
அண்ணாச்சி
வழி சொல்லு.
நல்ல வியாபாரம்
அவன்
ஐம்பதினாயிரம் போட்டு
மொத்த வியாபாரம்
நடத்தினான்.
ஐயாயிரம் மட்டுமே
இருப்பாய் இருந்தது.
அதையே முதலாக்கி
சிறு வியாபாரம் நடத்தினான்.
கடைசியில்
அவனுக்கு கடன் வந்தது.
பொய்யையே முதலாக்கி
அரசியல் நடத்தினான்.
இலட்சக் கணக்கில்
இலாபம் வந்தது.
மழை
வைரத்துளியாய் வழியும்
மழைத்துளி மனசு முழுதும்
மகிழ்ச்சி பரப்பும்.
மேகமரம் உதிர்க்கும்
பன்னீர்ப் பூக்களாய்
தூறல்கள்.
நட்சத்திரக் கம்பிகள்
தரை இறங்குவது மாதிரி
தாரைகள் பொழிந்திட
தேகம் சிலிர்க்கும்.
தண்ணீர் ஊசிகள்
தரையில் பாய
கொப்புளம் எழும்.
'ஓ'வெனப் பெய்யும்
பெரு மழையோ
பிரிய நண்பனாய்
முதுகில் அறையும்.
நண்பர்களோடு குற்றாலம
போய் பொழிந்து நகரும்
மேகங்களை மகிழ்ந்து
பார்ப்பதும் ஆனந்தம் தான்.
ஆனாலும்- நள்ளிரவுத்
தூக்கத்தில் அம்மா உசுப்பி
ஒழுகும் இடம் விட்டு...
பாய் நகர்த்தி...
மிடில் கிளாஸ்...
நாங்கள்
முதல் தேதியின் பிள்ளைகள்.
பற்றாக்குறையின்
பெற்றோர்கள்.
மேட்டு வர்க்கத்தின்
மிச்சத்தைக் காட்டுவதற்கு
நட்டப்படும் நடுத்தர வர்க்கங்கள்.
நாங்கள் போட்டிருக்கும்
சட்டையின் கோடுகளை
மற்றவர்கள் எண்ணிக்
கொண்டிருக்கும்போது
நாங்கள் மட்டுமே
அதன் இன்சால்மென்டுகளை
எண்ணிக் கொண்டிருப்போம்.
ஒயிட் அண்ட் ஒயிட்டில் டூ
விலரில் புருஷனோடு
போவதாய்க் கனவு கண்டு
வந்த எம் மனைவிமார்கள்
எதார்த்தத்தில் துருப்பிடித்த
சைக்கிளைக் கண்டதும்
வெறுப்படித்து இருக்கிறார்கள்.
ஐ.ஏ.எஸ். கனவுகளோடு
ஐந்து மாத பாக்கி சொல்லி
எம் பிள்ளைகள் டியூசன்
போய்க் கொண்டிருக்கின்றன.
எங்களைப் பொறுத்தவரை
அங்கிங்கெனாதபடி எங்கும்
இருப்பது ஆண்டவன் அல்ல...
அக்கவுண்ட் தான்.
காலம் காலமாய்...
சேதுவின் கரையில்
ஏகமாய்க் கூட்டம்.
சீதையின் பிரிவில்
சோகமாய் இராமன்.
அண்ணலின் மனைவி
அவனோடு சேர
தம் மனைவிகளின்
நினைவு
நெஞ்சிலும்
கொஞ்சம் கற்கள்
தலையிலும் சுமந்த கூட்டம்
சுற்றிலும்... சுற்றிலும்...
யமுனைக் கரையில்
கூட்டமாய் மக்கள்
அதன்
தண்ணீரில் பாதி கண்ணீர்.
மும்தாஜ் இறப்பில்
முடங்கிய ஷாஜஹான்
தாஜீன் நினைவை
பளிங்கில் செதுக்க
வீட்டு நினைவை
ஒதுக்கி வைத்து
வேலை செய்யும்
சிற்பிகள்... சிற்பிகள்.
சரித்திரம் எப்போதும்
பன்னீரின் கண்ணீரையே
பார்க்கிறதே!
வேர்வையின் விசும்பலை
விசாரிக்காதா?
மழைத் துளிகள்...
குறை கேட்கும் மந்திரி
கூட்டமாய் மக்கள்
வெள்ளைத்தாள் விற்பனை.
ஹைக்கூ மின்னல்கள்
கையில் காசில்லை
நட்சத்திரங்களைத் தான்
எண்ண வேண்டும்
நல்ல வியாபாரம்
அவன்
ஐம்பதினாயிரம் போட்டு
மொத்த வியாபாரம்
நடத்தினான்.
ஐயாயிரம் மட்டுமே
இருப்பாய் இருந்தது.
அதையே முதலாக்கி
சிறு வியாபாரம்
நடத்தினான்.
கடைசியில்
அவனுக்கு கடன் வந்தது.
பொய்யையே முதலாக்கி
அரசியல் நடத்தினான்.
இலட்சக் கணக்கில்
இலாபம் வந்தது.
தடுமாற்றம்தான்
ஆப்பசைத்த குரங்காய்
கோர்ப்பசேவ்...
இமைகளை உயர்த்திய
சோவியத் இமயம்
கூழாங்கல்லாய்...
வெள்ளை மாளிகையின்
ஜெராக்ஸாய்
கிரெம்ளின்...
அம்மா சாவுக்குச்
சிரிக்கும் குழந்தையாய்
மாஸ்கோ வாசிகள்...
ரொட்டிக்கு அழும்
பட்டினிப் பொழுதில்
சரித்திரம் மீண்டும்
செம்மண் பாதையில்
திரும்பக் கூடும்.
இது
தடுமாற்றம்தான்
தடமாற்றம் அல்ல.
வானவில்
புருவமே
இவ்வளவு அழகெனில்
உருவம்?
வாய்ப்பு
வேலையில் சேர்ந்த
அன்று அப்பா
படிப்படியாய்
முன்னேறும்படி
சொன்னார்.
பஞ்சப்படி
பயணப்படி
சலவைப்படி
மருத்துவப்படி என
படிப்படியாய்ப் பெற்றும்
உருப்படியாய் வீட்டில்
ஒன்றுமில்லை என்கிறார்
இப்போது அப்பா.
பார்வை
ஐந்து மணிக்கு
அலாரம் அடிக்க
எழுந்து போனாள்
வாசல் தெளிக்க
கோலம் போட்டு
கூடம் பெருக்கி
அடுக்களை கழுவ
ஆறு ஆனது.
பால் தரும்
ஆள்வர காப்பி
போட்டு எழுப்பிக்
கொடுக்க
ஏழு ஆனது.
சட்டினி அரைத்து
இட்டிலி சுட்டு
தட்டில் தருகையில்
சரியாய் எட்டு.
சின்ன மகனுக்குச்
சீருடை மாட்டி
கேட்டுக்கு வந்து
டாட்டா காட்டி
ஸ்கூலுக்கு அனுப்பி
ஹாலுக்குள்
நுழைகையில்
மணியோ ஒன்பது.
கணவரின் தேவை
கணக்காய் முடித்து
ஆபிஸ் அனுப்பி
பத்துத் தேய்த்த பின்
பார்த்தால் பத்து.
விட்டு
விடுதலையாகி...
சிட்டுக் குருவிக்கு
சிரமம் இல்லை.
காஸ் கனெக்ஷன்
காய்கறி பேரம்.
மளிகைக்காரனிடம்
பல்லிளிப்பு.
சிட்டுக்குருவிக்கு
சிரமம் இல்லை.
அதிகப்பட்சம் போனால்
ஐந்தாறு அரிசிதான்.
கடனுக்கு அலைச்சல்
காண்டிராக்டர் மோசடி.
சிமெண்ட் விலை
உயர்வால் தூக்கம்
தொலைப்பு.
சிட்டுக்குருவிக்குச்
சிரமம் இல்லை.
தேவையெல்லாம் கொஞ்சம்
தேங்காய் நார்தான்.
அவதூறு பேச்சு.
அதிகாரப் போட்டி.
பழகிய ஆளுக்கே
பள்ளம் தோண்டுதல்.
சிட்டுக்குருவிக்குச்
சிரமம் இல்லை.
எப்போதும் நேசப்
பார்வையும்
சந்தோசப்பாட்டும் தான்.
வெள்ளம்
வெக்கையில்
மனம் வெதும்பிச்
சொட்டு மழைக்கு
ஏங்கினேன்
வெள்ளமாய்ப் பிரவகித்து
துரும்பாய் அடித்துச்
சென்றாய் என்னை நீ.
தூர்தல்
உடைப்பெடுத்த ஏரியை
அடைக்கக் கூடுவார்கள்
அப்போது.
ஏரிகளைத் தூற்றுப்
பிளாட்டாக்கி
குழி தோண்டிக்
கொண்டிருக்கிறார்கள்
இப்போது.
விளக்கம்
பித்தளைச் சட்டிகளுக்குப்
புளிச்சக்கை.
சில்வர் தட்டுகளுக்கு
விம் பவுடர்.
வெள்ளிப்
பாத்திரங்களுக்கு
விபூதி மட்டும்.
பளபளவென விளக்கி
வைக்கும் அம்மாவால்
கடைசிவரை
விளக்கவே முடியவில்லை
அப்பாவிடம் தன் மனசை.
மனசில்...
அடைமழை நாளில்
இடைவெளி கிடைக்க
வீதிக்கு வந்து
விளையாடினான் மகன்.
திடீரென மேகம்
தீர்த்தம் தெளிக்க
மனைவி பதைத்து
மகனைத் தூக்கினாள்.
துண்டை எடுத்தவள்
துவட்டும் வேளையில்
முச்சந்தியிலிருந்து
பிச்சை கேட்கும்
சக்கர வண்டிச்
சிறுமி என்ன
ஆனாளோ என்ற
எண்ணம் வந்தது.
வௌவால் வாழ்க்கை
விளக்குகளை விடவும்
இருட்டையே நம்புகிறார்கள்.
பலூனைப் பெரிதாக்கவே
பயன்படுகிறது காற்று.
நதிபோலவே
நடந்துகொள்கிறது
சாக்கடை.
கைகுலுக்குவதை
விடவும் நகங்களால்
கீறவே விரும்புகிறார்கள்.
புத்தகங்கள் படிப்பதில்லை
பூக்களோடு சிரிப்பதில்லை
நிலா ஒளிபரப்பு எவருமே
பார்ப்பதில்லை.
கரன்சிகளை
எண்ணியே கழிகின்றன
நிமிடங்கள்.